பைக் திருட்டில் ஈடுபட்ட தமிழக வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பைக்கை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ஆரோவில்லை சேர்ந்த கோலுபெவ்ஸ் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் கேடிஎம் பைக் சர்வீஸ் சென்டரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பைக் திருடு போனதாக முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முகமது ஷேக் அலாவுதீன் தலைமையிலான போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே முதலியார் பேட்டை போலீசார் கொம்பாக்கம் ஆற்று பாலம் சந்திப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த சங்கர் என்பதும் அவர் ஒட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சங்கரை சிறையில் அடைத்தனர்.
No comments