கொல்லைப்புற நியமனத்திற்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னரின் உத்தரவின்பேரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வேலை வாய்ப்பகத்தில் பல லட்சம் இளைஞர்கள் பதிந்து காத்திருக்கும் நிலையில், எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப் புறமாக ஆட்களை திணிப்பது தொடர் கதையாக உள்ளது. சொசைட்டி என்ற பெயரில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அரசு பணிகளை வாரி வழங்குகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் கொல்லைப்புற நியமனத்திற்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடியாக நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, நிர்வாக சீர்த்திருத்த துறையும் அனைத்து துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், புதுச்சேரி அரசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது துறைகளில் அரசு பணி நியமனங்களை செய்ய உரிய தேர்வு செயல்முறையை பின்பற்ற வேண்டும்.ஆட்சேர்ப்பு விதிகளின்படி அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் அவை தீவிரமாகப் பார்க்கப்படும். அத்தகைய சட்டவிரோத கொல்லைப்புற நியமனங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது எந்தவித தயக்கமும் இன்றி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments