சபாநாயகரை ஒருமையில் விமர்சனம் செய்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேருவை, சபாநாயகர் உத்தரவுபடி சபை காவலர்கள் குண்டு கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றம்..
புதுவை சட்டசபையில் இன்று பூஜ்யநேரத்தை தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், சட்டசபை குழுக்களுக்கான தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள் இந்த ஆண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பான விவாதத்தில் சுயேச்சை எம்எல்ஏ சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும்,சபாநாயகர் தான் தோன்றித்தனமாக பேசுகிறார். சபாநாயகராக இருக்க தகுதியில்லை, நீங்கள் ஒரு அவமான சின்னம் எனக்கூறி, சபாநாயகரை ஒருமையில் பேசினார். இதை தொடர்ந்து ஒருமையில் பேசிய நேருவை, சபைக்காவலர்கள் அவையில் இருந்து வெளியேற்றவும், வெளியேற மறுத்தால் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றவும் சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். தொடர்ந்து சபைக்காவலர்கள் நேருவை வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றினர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறுந்து ஒழுங்கீனமாக செயல்பட்ட நேருவை இந்த கூட்டத்தொடர் முழுவது சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி எழுந்து நேரு உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடியவர். அதுபோன்ற ஒரு நிலையில் அவர் பேசியதை சபாநாயகர் மன்னித்து அவர் மீண்டும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன் என்றார் .முதல்வர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, நேருவை மீண்டும் அவை நிகழ்ச்சிகள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுகிறேன் என சபாநாயகர் தெரிவித்ததை தொடர்ந்து நேரு அவை நிகழ்வுகளில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
Post Comment
No comments