சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு, மிரட்டிய ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
புதுச்சேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மகா ராஜா, 50. இவர் கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கடைக்கு வந்த மூன்று பேர், அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி வெளியேறும்படி மிரட்டினர்.
பின், அங்கிருந்த கடையின் உரிமையாளர் மகாராஜாவிடம் சென்று நாங்கள் இப்பகுதியின் ரவுடிகள், இங்கு கடை நடத்த வேண்டும் என்றால், எங்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மாமூல் தர வேண்டும். இல்லையெனில், கொலை செய்து விடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர்.மகாராஜா புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், கடையில் மாமூல் கேட்டு மிரட்டியது ரவுடிகளான குண்டுபாளையம் மணிகண்டன், 24; திலாஸ்பேட்டை பிரசாந்த், 23, மற்றும் கார்த்திக்ராஜ், 25; என்பது தெரியவந்தது.இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments