போலி ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து, காரைக்கால் வாலிபர் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்தார்.
காரைக்காலை சேர்ந்த பாரத் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதை நம்பிய பாரத், மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் பங்கு சந்தையில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 110 அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் லோன் தருவதாக கூறியுள்ளார்.இதைநம்பி காளியப்பன் லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, காளியப்பன் 47 ஆயிரத்து 350 அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த ஆர்த்தி 28 ஆயிரத்து 505, புதுக்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசன் 18 ஆயிரத்து 600, வாணரப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி 8 ஆயிரம், பெரிய காலாப்பட்டு பிரியதர்ஷினி 18 ஆயிரம் என 6 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 565 ரூபாயை இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments