புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார்களின் அணி வகுப்பு கண்காட்சியை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்திய வரலாற்று கார்கள் சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல் (ரூ. 3 கோடி மதிப்பு),நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்ஜி. டார்ஜ்,செவர்லெட், ஃபோர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ் பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் அக்கால மகா ராஜாக்கள், பழங்கால பிரபுக்கள், பிரிட்டிஷ் இளவரசி இந்தியா வந்தபோது பயன்படுத்திய கார் ஆகியன இடம் பெற்றிருந்ததாக சில கார்களின் உரிமையாளர்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர். மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி, கோவை என நாடு முழுவதும் பல்வேறு நகர்களில் இருந்து இம்முறை கார்கள் வந்திருந்தன. அதேபோல் 10 பாரம்பரியமான மோட்டார் சைக்கிள்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர் பெயர், தயாரிக்கப்பட்ட ஆண்டுபோன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறைச் சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி வகுத்து நின்ற பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், அந்த கார்களின் முன்பு நின்றபடி படம் எடுத்துக் கொண்டனர்.
No comments