வில்லியனூர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு..
வில்லியனூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இணைந்து இன்று நேரில் ஆய்வு செய்தார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என்.பாளையம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட எழில் நகரையும், அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரையும் இணைத்து சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ள 400 சதுர அடி இடம் தனி நபருக்கு சொந்தமாக உள்ளதை அரசு சார்பில் பெற்றுக்கொடுத்து சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் ஜி.என்.பாளையம், சுல்தான்பேட்டை, வெண்ணிசாமி நகர், வெங்கடேஸ்வரா நகர், நடராஜன் நகர், வள்ளியம்மை நகர், முத்துப்பிள்ளை பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்று அக்கிராம மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கடந்த 19–ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மேலும், வி. மணவெளி, வி. தட்டாஞ்சாவடி கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தை விரிவுபடுத்தவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா மற்றும் அதிகாரிகள் குழு இன்று காலை எழில் நகர் – திருக்குறளார் நகரை இணைக்கும் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தார்கள். அப்போது, மக்கள் பயன்படுத்தும் இந்த சாலைக்கு தேவையான இடத்தை அரசு கையகப்படுத்தித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, வி. மணவெளி, வி. தட்டாஞ்சாவடி மக்கள் பயன்படுத்தும் மயானத்தை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் மயான விரிவாக்கம் குறித்து விரைவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வட்டாட்சியர் சேகர், நகரக் குழும உறுப்பினர் செயலர் புவனேஷ்வரன், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இராமசாமி, தர்மராஜ், தொகுதி செயலாளர் மணிகண்டன், சபரி, சுப்ரமணி, கார்த்தி, மிலிட்டரி முருகன், பாலா, வீரபத்திரன், மணி, சந்துரு, ரகுராமன், அன்பழகன், ஆறுமுகம், சுப்ரமணி, சரவணன், ராமதாஸ், வாசு, சுப்புராயலு, ஏழுமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments