ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி நவீன முறையில் மறு நில அளவை மேற்கொள்ளும் புதிய திட்டத்தினை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முழுவதும் நவீன முறையில் மறு நில அளவை செய்ய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் நிலம் மற்றும் வளங்கள் இயக்குனரகம், நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் "நக்சா"என்ற திட்டத்தில் புதுச்சேரி முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில், முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானூர்தியை (ட்ரோன்) பயன்படுத்தி மறு நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புதிய வரைபடங்களை உருவாக்க திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் முதல் கட்டமாக இத்திட்டம், புதுச்சேரி முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் இன்று செயல்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், குலோத்துங்கன் துணை மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்திற்கு முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நில உடைமை தாரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments