ஆண்களைப்போல பெண்களையும் பெற்றோராக கருதி எஸ்சி, எஸ்டி சாதி சான்று வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி.
புதுச்சேரியில் ஆண்களைப்போல பெண்களையும் பெற்றோராக கருதி எஸ்சி, எஸ்டி சாதி சான்று வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி மக்கள் அல்லாத சமூகத்துக்கு 2001ம் ஆண்டை வரையறை செய்து சாதி சான்று வழங்கி வரும் புதுச்சேரி அரசு, புதுச்சேரியில் பிறந்து இங்கேயே 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பட்டியலின மக்களுக்கு 2001ம் ஆண்டை அளவு கோலாக வைத்து பூர்வீக பட்டிலினத்தவர் சாதி சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப் பேரவை நோக்கி பேரணி இன்று நடைபெற்றது.
மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சுதேசி மில் அருகில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மிஷன் வீதி ஜென்மராக்கினி கோயில் எதிரே சட்டப்பேரவை அருகில் முடிவடைந்தது. இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
No comments