Breaking News

கூட்டாம்புளியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் துவக்கி வைத்தார்.

 


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய 3 பொருள்கள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 957 நியாய விலைக்கடைகள் மூலம் 5,42,432 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். அதில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 761 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கூட்டாம்புளி கிராமத்தில் 1,342 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர். வருகின்ற 30ம்தேதி வரை வேட்டி, சேலைகள் வழங்கப்படும். ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பானது பொங்கலுக்கு முன்னதாகவே அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நபர்களுக்கும் எந்த நாளில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு எந்த வித நெருக்கடி இல்லாமல் இயல்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், துணைப்பதிவாளர் சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, தாசில்தார்கள் முரளிதரன், ஞானராஜ், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சாம் டேனியல் ராஜ், அந்தோணிபட்டுராஜ், சுடர்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் மகாராஜா, பானு, வருவாய் ஆய்வாளர்கள் செல்வலட்சுமி, ஜெயபிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!