மதுபான தொழிற்சாலை அனுமதி விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நடந்த நிலைமை தான்,புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும்.
புதுச்சேரி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி, ஆர்.கே.நகர், தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்றது.
புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார் .
இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை பேச்சாளர் கடலூர் இரா.அன்பழகன், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் ஆளும் அரசானது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக இல்லை. எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள திமுக புதுச்சேரி பாஜகவுடன் நேரடி உறவு வைத்துள்ளது.பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை தலைவர் பஞ்சாயத்து தலைவராக மாறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் சூதாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களின் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையை மிரட்டி குற்றவாளிகளுக்கு துணை போகிறார் சபாநாயகர் பதவியுடன் உள்துறை அமைச்சர் பதவியையும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் வைத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் எதிர்கட்சியே இல்லாத ஒரு நிலையை முதலமைச்சர் ரங்கசாமி உருவாக்கியுள்ளார். மதுபான தொழிற்சாலையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments