Breaking News

தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்யும் லாரிகள் அனுமதியின்றி சரக்கு ஏற்றி வருவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு!

 


தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சரக்குகளை இறக்குமதி செய்யும் சரக்கு பெட்டக லாரிகளில் உரிய ஆவணமின்றி சரக்குகளை ஏற்றிவருவதை தடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஏற்றுமதி லாரி உரிமையாளர்கள் சங்கம், ஐக்கிய ஜனதா தள தொழிலாளர் அணியினர் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஏற்றுமதி லாரி உரிமையாளர்கள் சங்கம், ஐக்கிய ஜனதா தள தொழிலாளரணி மாநில தலைவர் தாமரை வெங்கடேசன் தலைமையில் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதி பொருட்கள், சரக்கு பெட்டக கிடங்கின் மூலம் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சரக்கு பெட்டக லாரி மூலம் அனுப்பப்படுகின்றன. 

இந்த கன்டைனர் சரக்கு லாரிகள் மீண்டும் தூத்துக்குடி திரும்பும்போது, உரிய ஆவணம் இல்லாத பொருட்களை குறைந்த வாடகைக்கு ஏற்றி வருகின்றன. இதனால், அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, ஏற்றுமதி பொருள்களும் சேதமடைகின்றன. இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஏற்றுமதி லாரி உரிமையாளர்கள் சார்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போது, திருப்பூர் ஏற்றுமதி டிரான்ஸ்போட்டர் சங்க தலைவர் ரத்தினசாமி, செயலர் சந்திரசேகரன், ஐக்கிய ஜனதா தளம் தொழிலாளரணி மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!