ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை அப்படி சொல்வீங்களா? - எஸ்.ஜி.சூர்யா ஆவேசம்!
இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, முதன் முதலில் எனக்கு 5ம் வகுப்பு படிக்கும் போது சாவர்க்கர் பற்றி அறிமுகம் கிடைத்தது. அப்போது எனது பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப்போட்டியில் பங்கேற்றிருந்தேன். எனது தாத்தா எனக்கு சாவர்க்கர் பற்றிய குறிப்பை எழுதிக் கொடுத்திருந்தார். பிற மாணவர்கள் காந்தி, நேரு, மகாகவி பாரதியர் குறித்து பேசினார்கள், அதில் நான் மட்டும் தான் சாவர்க்கர் பற்றி பேசினேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், என்னுடைய ஆசிரியருக்கு கூட சாவர்க்கர் யார் என்று தெரியவில்லை. ஆனால் நான் தான் அனைவரையும் விட வித்தியாசமாக பேசினேன் என்பதால் எனக்கு அந்த போட்டியில் முதல் பரிசு கிடைத்தது” என்றார்.
தான் சாவர்க்கர் குறித்து புத்தகம் எழுத காரணமாக இருந்ததே பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தான் எனக்கூறிய அவர், 2016ம் ஆண்டு தேர்தல் பணிகளின் போது ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தமிழகத்தில் மட்டும் சாவர்க்கர் குறித்து யாருமே எதுவும் எழுதவில்லை என்ற எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அப்போது அவர் யாருமே எழுதவில்லை என்றால் என்ன, நீ எழுது என்றார். அன்று அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் இந்த புத்தகம் உருவாக உந்துதலாக அமைந்தது என்றார். நான் புனேவில் தான் படித்தேன். அப்போது தான் சாவர்க்கர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அங்கு சாவர்க்கர் மிகவும் பிரபலமான தலைவர். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு காங்கிரஸ்காரர் கூட சாவர்க்கரைப் பற்றி தவறாக பேசிவிடமாட்டார்கள். ஏனெனில் மராட்டியர்கள் சாவர்க்கரை உண்மையாக நேசிக்கக்கூடியவர்கள், அதனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிக்கான தலைவராகவும் அவர் திகழ்கிறார்.
தமிழகத்தில் வி.வி.எஸ். ஐயர் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் சாவர்க்கர் உடைய முக்கியமான தளபதிகளில் ஒருவராக இருந்தவர். இந்த உண்மை கூட தமிழகத்தில் வி.வி.எஸ். ஐயர் பற்றி பேசுபவர்களால் மறைக்கப்படுகிறது. அதேபோல் கருணை மனு என்ற வார்த்தையை மன்னிப்பு கடிதம் என மாற்றக்கூடிய திராவிட கட்சிகளின் மத்தியில் தான் நாம் வாழ்த்து வருகிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் கூட ஜனாதிபதிக்கு கருணை மனு எழுதியுள்ளனர். சாவர்க்கர் எழுதிய மனுவை மன்னிப்புக் கடிதம் எனக்குறிப்பிட்ட ஒரு ஊடகங்கள் கூட அவர்கள் எழுதிய மனுவை மன்னிப்புக் கடிதம் எனக்குறிப்பிடவில்லை. இப்படித்தான் கருத்து திணிப்பு மற்றும் கருத்து திரிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என சாவர்க்கர் ஆசைப்பட்டார். ஆனால் இந்துக்களுக்குள் இருந்த வேற்றுமையால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவே முடியாது என்றும் சாவர்க்கரே தெரிவித்துள்ளார். அந்த எண்ணத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். முதல் முறையாக 2014ம் ஆண்டு இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். இதன் மூலமாக சாவர்க்கரின் எண்ணம் நிறைவேறியுள்ளது எனக்கூறினார்.
No comments