மக்கள் குறைதீர் முகாம் தொடர்ந்து நடைபெறும்: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் நடைபெற்று வரும் மக்கள்குறைதீர் முகாம் தொடர்ந்து நடைபெறும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணைமேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், மேயர் ஜெகன்பெரியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வகையிலும் போர்க்கால அடிப்படையில் பணிகளை சிறப்பாக செய்துள்ளது. பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப்போல் இந்தப் பகுதியில் 80 சதவீதம் சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. சாலைகளை பொறுத்தவரை சூழற்சி முறையில் ஓவ்வொரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டு நடைபெறும். பிரதான சாலைகளில் இருபக்கமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் விபத்துக்கள் பல தடுக்கப்பட்டுள்ளன. விரிவான சாலைகள் கிடைப்பதின் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் முகாம் தள்ளி வைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
முகாமில், துணை பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, ராமசந்திரன், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, காந்திமதி, சுப்புலெட்சுமி, கற்பககனி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments