முத்தியால்பேட்டை ஓம் சக்தி கோயிலில் பூஜை பொருட்களை திருடிய வாலிபரை போலிசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வசந்தம் நகர் அருகே ஓம் சக்தி ஆலயம் அமைந்துள்ளது.கடந்த மாதம் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் திருடு போனதாக கோவில் நிர்வாகிகள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீசார் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், ஓம் சக்தி கோயிலில் தனது கூட்டாளியுடன் சேர்ந்து பூஜை பொருட்களை திருடிய லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
No comments