புதுச்சேரியில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது..
புதுச்சேரியில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது வாகன ஓட்டிகள்,ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உடனடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி புதுச்சேரி ,காரைக்காலில் லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்பட்டு பெட்ரோல் 96 ரூபாய் 26 காசுக்கும் , டீசல் 86 ரூபாய் 47 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நடுத்தர, ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
No comments