அரசு வேலைக்காக மகனின் நண்பனிடம் ரூ.13 லட்சம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்- பணத்தை திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. வருவாய்த்துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன் எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அரவிந்தனுக்கு (வயது 31) அரசு வேலை வாங்கித்தருவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, அரவிந்தனின் கல்லூரி நண்பரான சீர்காழியை அடுத்த நந்தியநல்லூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் கிருபாகரன் என்பவர் தனக்கு அமைச்சர்கள் பலருடன் தொடர்பு உள்ளதாகவும், தமிழ்நாடு தேர்வாணைக் குழு அதிகாரிகள் மூலமாக வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் வேலை வாங்கித்ததருவதாகவும், அதற்கு ரூ.13 லட்சம் செலவாகும் என்றும் இந்த தொகையை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது சகோதரர் ராஜராஜன், நாகப்பட்டினத்தை சேர்ந்த தினகரன் ஆகியோரை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய புகழேந்தி, தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்றும், ரிட்டயர்மென்ட் பணம் மற்றும் கடன் வாங்கியும் ரூ.13 லட்சத்தை திரட்டி 2020-ஆம் ஆண்டு செப்.10-ஆம் தேதியில் இருந்து 4 நாட்களில் ஐந்து தவணைகளாக ரூ.13 லட்சத்தை கிருபாகரன் கூறியபடி ராஜராஜன், தினகரன் மற்றும் லோகநாதன் ஆகியோரது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பின்னர் பலமுறை கேட்டும் அரசு வேலை வாங்கி தராதத்துடன், பணத்தையும் திரும்பி தரவில்லை. மேலும் பணத்தை திரும்பி கேட்டால் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி புகழேந்தி மற்றும் அவரது மனைவி பூபதி ஆகியோர் கிருபாகரனை நேரில் சந்தித்து பணத்தை திரும்பக் கேட்டபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பூபதி மற்றும் புகழேந்தி ஆகியோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் மனு அளித்து, இழந்த பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
No comments