டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி: மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தகவல்..
தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஆர்பி மற்றும் டிஆர்பி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு-ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வினை எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு வைத்து நடத்தப்படும். வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 0461-2003251 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்தோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments