காலாவதியாகாத சாக்லேட்டில் உயிருடன் பூச்சி நெளிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி..
திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆர்த்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 5-ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த போது பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்கியுள்ளனர். அதில் சாக்லேட் பாக்ஸ் (டியூக்ஸ் டிரஃபல்) இரண்டு வாங்கி உள்ளனர். ஒரு பாக்ஸில் 25 சாக்லேட் இருந்துள்ளது. பின்னர், ஆடுதுறைக்கு தன் தாய் வீட்டிற்கு சென்ற ஆர்த்தி ஒரு சாக்லேட் பாக்ஸை அங்கு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். ஒரு பாக்ஸை தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கொடுக்க வைத்துக் கொண்டு ஊர் திரும்பி உள்ளனர். இந்நிலையில் இன்று ஆர்த்திக்கு போன் செய்த அவரது தாயார் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்க வேண்டாம் என்றும் அதில் பூச்சி உயிருடன் நெளிவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் தங்களிடமிருந்த சாக்லேட் பாக்ஸை பிரித்து பார்த்தபோது சாக்லேட்டில் உயிருடன் பூச்சி ஊர்ந்து சென்றுள்ளது. அந்த சாக்லேட் பாக்ஸில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தயாரிக்கப்பட்ட சாக்லெட் 12.06.2025 காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
காலாவதியாகாத சாக்லெட்டில் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தம்பதிகள் இருவரும் சாக்லேட் வாங்கிய மயிலாடுதுறை ஷாப்பிங் மாலுக்கு வந்துள்ளனர். அங்கு நிறுவனத்திடம் புகார் தெரிவித்து சாக்லேட்டை விற்பனைக்கு வைக்காதீர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தினர் மேலே இருந்து பூச்சி விழுந்திருக்கலாம் என்று அலட்சியமாக கூறியதாக குற்றம் சாட்டிய மணிகண்டன் ஆர்த்தி தம்பதியினர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். நிறுவனத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் இருவரிடம் புகாரை பெற்றுக் கொண்டார். விற்பனைக்கு உள்ள இந்த சாக்லெட்டில் எந்த சாக்லெட்டை எடுத்து பிரித்தாலும் அதில் இருந்து பூச்சி உள்ளதாக குற்றம்சாட்டி பிரித்து பூச்சியை காண்பித்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் சாக்லேட்டை கோயமுத்தூரில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாகவும் முடிவுகளின் அடிப்படையில் சாக்லேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments