Breaking News

தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் திறந்து விடுவதாக பொதுமக்கள் புகார்; ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.


ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் திறந்து விடுவதாக பொதுமக்கள்  தரப்பில் எழுந்த புகாரின் அடிப்படையில் ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை திடீர் ஆய்வு  மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ராணிப்பேட்டை,சிப்காட் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவரும் 100 க்கும் மேற்பட்ட தோல்  மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரை சுற்றுச் சூழல்  விதிகளை மீறி மழை நீர் கால்வாய்களில் திறந்து விடுவதாகவும், இந்த ரசாயன  கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் கலந்து நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட  சுற்றுச்சூழல் அதிகாரிகளும், விதியை மீறி ரசாயன கழிவுநீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார்  தோல் தொழிற்சாலை ஒன்றில் இருந்து திறந்துவிடப்பட்ட ரசாயன கழிவுநீர் வெளியேறி  நேரடியாக  நீர்நிலையில்  கலந்து வருவதாக ஆதாராத்துடன் பொதுமக்கள் புகார்  தெரிவித்தனர். அதன் பேரில் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை கழிவுநீர் வெளியேற்றுவதை நிறுத்துவது தொடர் சம்பவமாக நடந்து வருகிறது.


இந்த சூழலில் ராணிப்பேட்டை வன்னிவேடு பகுதியில் இயங்கி வரும் ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிநீரை ராட்சத பைப்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, எதிர்மறை சவ்வுடு பரவல் முறையில் தோல் கழிவுநீரை நன்னீராக  மாற்றி  மீண்டு மறுபயன்பாட்டுக்கு  அனுப்பும் முறை குறித்தும், நன்னீரில்  கலந்துள்ள அதிகப்படியாக உப்பு தனியாக பிரித்தெடுக்கும் கட்டமைப்புகளையும், சூரிய  ஒளி மூலம் மின்சாரம்  உற்பத்தியும், சூரிய ஒளி மூலம் நீர் ஆவியாக்கி திடக்கழிவுகளை உலர்த்துதல் மற்றும் மேலாண்மை செய்யப்படுவதை பார்வையிட்டு கேட்டறிந்தார்.


ஆய்வின் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய தலைவர் ஆர்.ரமேஷ் பிரசாத், மேலாண்மை இயக்குனர் சி. எம். ஜபருல்லா, இயக்குனர் கலிமுல்லா சாகிப், சிப்காட் திட்ட இயக்குனர் மகேஸ்வரி சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் ஆர். சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!