ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரூ.22,000 மதிப்பிலான பரிசுகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.
பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமி சார்பில் ஐந்தாவது மாநில அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஓவியத்திறனை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமியின் செயலாளர் ஓவியர் ஸ்ரீதளாதேவி ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ஓவியப் போட்டியில் முதல் நிலை தேர்வு பெற்ற மூன்று மாணவர்களுக்கு "பெஸ்ட் பிரஷ்" விருதும், 22 மாணவர்களுக்கு ரூ.22,000 மதிப்பிலான பரிசுத்தொகைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏராளமான மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டிக்கான சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிசு பெற்ற மாணவர்களின் ஓவிய கேடலாக் புத்தகத்தையும் வெளியிட்டு ஓவிய ஆசிரியர்களுக்கு கேடயத்தை பரிசாக வழங்கினார். இதில் புதுவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதல்வர் அன்னபூரணி, தேசிய ஓவியர் விஸ்வம் ஆகியோர் கலந்துகொண்டு இரண்டாம் நிலை தேர்வு செய்யப்பட்ட 152 மாணவர்களுக்கு பரிசாக கேடயமும், பத்மஸ்ரீ சிற்பி முனுசாமி, தேசிய ஓவியர் கலைமாமணி சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு மூன்றாம் நிலை தேர்வு பெற்ற 213 மாணவர்களுக்கு பதக்க விருதுகளையும் வழங்கி பாராட்டினார். பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமி தலைவர் கலைமாமணி சேகர் விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.
No comments