நகராட்சியுடன் ஆலம்பட்டி கிராமத்தை இணைக்கக்கூடாது: நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..
தங்கள் கிராமத்தை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இனாம்மணியாச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆலம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த வேலைகள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை செய்து வருகிறோம்.
இந்நிலையில் அரசு எங்கள் கிராமத்தை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்போவதாக அறிகிறோம். நகராட்சியுடன் எங்கள் கிராமத்தை இணைப்பதால் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, கட்டட திட்ட அனுமதி கட்டணம், கழிவுநீர் வடிகால் கட்டணங்கள் அதிகப்படியாக உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். இதனால், விவசாயம் மற்றும் கூலி வேலை பார்க்கும் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை, கலைஞர் கனவு இல்லம் போன்ற கிராம ஊராட்சி திட்டத்தின் மூலம் கிடைக்கும் பல்வேறு அரசு சலுகைகளை நாங்கள் இழக்க நேரிடும். எனவே, எங்கள் ஆலம்பட்டி கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். என கிராம மக்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments