Breaking News

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

 


காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய மாநில அரசுகள் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், மீனவர்கள் என 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலங்கை அரசை கண்டித்தும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் பங்கேற்ற மீனவ பெண்கள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், ஆதரவற்றுள்ள குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன்,

 சீன அரசுக்கு கை கூலியாக செயல்பட்டு வரும் இலங்கை அரசானது நம் நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதன் மூலம் நம் நாட்டின் மீது மறைமுக போரை உருவாக்குவதாக தெரிகிறது. இதற்கு இலங்கை மீது இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

 கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சமுதாய மீனவர்கள் இலங்கை அரசால் துப்பாக்கிச்சூட்டால் தாக்கப்படுவதும், அவர்களின் மீன்பிடி சாதனங்கள் முழுமையாக அழிக்கப்படுவதுமாக உள்ளது. தமிழ் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றாலே பயத்துடன் அவர்கள் திரும்பும் சூழல் உள்ளது. நேற்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யப்பட வேண்டும். குண்டடிப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் புதுச்சேரிக்கு கொண்டு வந்து அவர்களுக்கு உரிய உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!