Breaking News

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!

 


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பயனாளிகளுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  

கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!