Breaking News

குத்தாலம் காவிரி கரையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு 5 கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரி..

 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல்போனது. இதனையடுத்து சூரியபகவான் தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளை பெறவும் குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனிதநீராடி தவமிருந்து அரக்கனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம். அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம். இதன் சிகர நிகழ்வான கார்த்திகை மாத கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ அரும்பனவனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓம்காளீஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், வெள்ளி மூஷிக வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் மங்கள வாதியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் ஒலிக்க வீதி உலாவாக காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!