தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு எஸ்ஆர்.நகர் மக்கள் நன்றி..!!
தூத்துக்குடி எஸ்.ஆர்.நகர் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட அமுதாநகர் அருகே எஸ்.ஆர்.நகர் அமைந்துள்ளது. புதிதாக வளர்ந்துவரும் இந்த பகுதியில், மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருந்தது. தற்போது 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக இந்த பகுதி மக்கள் லாரி மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வசதி இல்லாததால் சிலர் வீடுகளை காலி செய்யும் நிலைக்கு சென்றனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து தங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டு வந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகளிடம் எஸ்.ஆர்.நகர் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து உடனடியாக எஸ்.ஆர்.நகர் பகுதிக்கு குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்காக எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சேதுராமலிங்கம், ஜோசப் ரவி, கார்த்திக், ராம்குமார், ரத்தீஷ் உள்ளிட்ட பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், எஸ்.ஆர்.நகர் பகுதிக்கு குடிநீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். எங்களது நிலையை உணர்ந்த மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலம் உள்ளிட்டோர் துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மேயர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். அப்போது மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உடனிருந்தார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments