புதுச்சேரியில் ஆளுகின்ற அரசு தொடர்ந்து கலாச்சார சீரழிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.. சாமிநாதன் அறிக்கை..
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் |
புதுச்சேரியில் ஆளுகின்ற அரசு தொடர்ந்து கலாச்சார சீரழிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நடன நிகழ்ச்சியில் அருவருக்கத்தக்க கலாச்சாரத்தில் மது போதையில் நடனம் ஆடக்கூடிய ஒரு கேவலத்தை புதுச்சேரி மண்ணில் அரங்கேற்றியுள்ளதால், மீண்டும் அரசு கடற்கரை சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்துவதற்கு ஆளுநர் தடை செய்ய வேண்டும். புதுச்சேரி என்றால் சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த புண்ணிய பூமியில் கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் அரசும், தற்போது ஆளுகின்ற அரசு, மாற்று அரசு தவிர காங்கிரஸ் சிந்தனை கொண்ட அரசு வழி வழியாக காங்கிரஸில் இருந்து வந்தவர்களே தொடர்ந்து அதே சிந்தனையில் இந்த அரசை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமான ரெஸ்ட்ரோபார், மறைமுகமான சூதாட்டம், பயமில்லாத கஞ்சா விற்பனை ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தை கலாச்சார சீரழிவுக்கு முன் மாதிரி மாநிலமாக தற்போதைய அரசு மாற்றி வருகிறது. இத்தகைய செயல்களை கண்டித்து வருகின்ற ஜனவரி முதல் இந்த அரசை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
வருமானம் வரக்கூடிய, வேலை வாய்ப்பு தரக்கூடிய அனைத்து கதவுகளையும் இரண்டு அரசுகளும் மூடிவிட்டது. மில்களை மூடியது மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு போன்ற தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இல்லை, கம்பெனியும் இல்லை. மோசமான தொழில்களாலும், ரவுடிகள் தொல்லையாலும் அண்டை மாநில எல்லையில் அமைந்துள்ள பூத்துறை, வானூர் போன்ற பகுதிகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்களே தொழில் செய்யக்கூடிய நிலைமையை ஆண்ட அரசும், ஆளுகின்ற அரசும் இரண்டுக்கும் எந்த வேறுபாடு இல்லாமல் செய்து கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த மக்களும் கலாச்சார சீரழிவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பணத்தை மட்டுமே நம்பி எதை வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய அரசாங்கமாக தற்போது ¢உள்ள அரசாங்கம் உள்ளது. இது ஆபத்தான நிலையாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், புதிய தொழிற்சாலைளையும் உருவாக்காமல் ஆயிரக்கணக்கான மதுக்கடைகளையும், கலாச்சார சீரழிவு நிகழ்ச்சியிலும் கொண்டு வந்து மாபெரும் சாதனையை இந்த அரசு மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. புதுச்சேரியில் வசித்து வரும் பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறும் போது கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த மாதம் ஒரு ஓட்டலில் ஒரு ரவுடி கும்பல் மிரட்டியதும், மறைமுகமாக தொடர்ந்து பல குற்ற செயல்களை இதன் மூலம் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம், மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் செய்யக் கூடிய அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தற்போதைய அரசாங்கம் இல்லாத புதிய அரசாங்கம் உருவாக அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை உடனே தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றமும் செல்ல தயாராக உள்ளோம். மேலும், வழிபாட்டு தளங்கள் மற்றும் பள்ளி அருகில் உள்ள ரெஸ்டோபார்களால் கலாச்சார சீரழிவுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் உடனடியாக இந்த வழிபாட்டு தளங்கள் மற்றும் பள்ளி அருகில் உள்ள ரெஸ்டோபார்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments