பெண்கள் மீது முதல்வர் மிகுந்த அக்கறை வைத்துள்ளார்! கனிமொழி எம்.பி.
பெண்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை உள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமும் இல்லாமல் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இதே ஞானசேகரன் மீது பாலியல் தொல்லை மட்டுமில்லாமல், செயின் பறிப்பு குறித்தும் புகார் வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் அதனை செயின் பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர். இந்த குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை அளித்திருந்தால், அவர் மீது ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அப்போது, அதிமுக அரசு கடமையை செய்ய தவறியதால் இன்று இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க காரணமாகிவிட்டது. இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் படிக்க முன்வரக்கூடிய தமிழகத்தில் அனைத்து பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை முன்வைக்கும்போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வரும், திமுகவும் பெண்களின் உரிமைக்காகவும், பெண்களின் கல்விக்காகவும், உரிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது. பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை உள்ளது. அதனால்தான் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments