Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு..


சீர்காழி வட்டத்திற்குட்பட்ட திருமைலாடி அங்கன்வாடி மையம், புத்தூர் ஊராட்சி பயணியர் நிழலகம், துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொள்ளிடம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நியாய விலைக் கடை ஆகிய பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் திருமைலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து, தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, புத்தூர் ஊராட்சி கடைத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழலகம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு கட்டுமான பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் தரமாக பணிகளை செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.பின்னர், துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வி திறனை அறியும் வகையில் ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் வினாக்களை எழுப்பி, கற்றல் திறனை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, கொள்ளிடம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, நோயாளிகளின் வருகை, சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு குறித்தும், மற்றும் புறநோயாளிகள் பிரிவகத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்கள். மேலும், கொள்ளிடம் ஊராட்சியில் நியாய விலைக் கடையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருட்களின் தரமாகவும், எடை சரியாகவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளையும், அரசு மாணவியர் விடுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ்,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சன்,உமா சங்கர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!