மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது! அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆகிய நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் மாநகராட்சியில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை நின்று சில நாட்கள் ஆகியும், மில்லர்புரம் ஹவுசிங்போர்டுகாலனி, ஆதிபராசக்திநகர், ரஹ்மத்நகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை. இந்நிலையில் ஆதிபராசக்திநகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ராட்சத பம்பிங் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு கூடுதலாக வடிகால்கள் வெட்டப்பட்டு மழைநீரை அகற்றுவதற்கான பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
தூத்துக்குடி மாநகராட்சியில் தேங்கியுள்ள மழை நீர் 80 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 220 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளைநீரை வெளியேற்றுவதற்காக பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்ட வடிகால்கள், பம்பிங் ஸ்டேஷன், உப்பாற்று ஓடை தூர்வாருதல் போன்ற பணிகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அதிகளவு பெய்தபோதும் பாதிப்புகள் பெருமளவு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments