ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தூத்துக்குடியில் அமைப்புச்சாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..
தூத்துக்குடியில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து ஆலைகளையும் திறக்க வலியுறுத்தி அமைப்புச்சாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம், அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் சார்பில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை, அனல்மின்நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆலைகளையும் மீண்டும் திறக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி தேசிய பொதுச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் நினைத்தால், மீண்டும் இந்த ஆலையை திறக்கலாம். இதன்மூலம், சுமார் 3 ஆயிரம் லாரிகள் இயங்கும். அதுபோல அந்த லாரிகளில் மூலப்பொருள் மற்றும் பினிஷிங் புராடெக்டுகள், அவற்றை கையாள தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இதேபோல துறைமுக தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும். ஆலை மூடப்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் லாரி உரிமையாளர்கள் பலர் லாரிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால் ஒன்றிய, மாநில அரசுக்கு வரி வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் நாட்டின் 40 சதவீத தாமிர தேவையை பூர்த்தி செய்யும். மேலும், ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 40 ஆயிரம் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எனவே, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை மற்றும் அனல் மின் நிலையத்தினை உடனடியாக இயக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் தர்மர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாநகரத் தலைவர் ஜெயபாலன் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments