சட்டமன்ற அவை தலைவர் மாண்புகளை மீறி செயல்படும் சபாநாயகர், அன்பழகன் குற்றச்சாட்டு..
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவராக உள்ள திரு. செல்வம் அவர்கள் சட்டப்பேரவை மாண்புகளையும், மரபுகளையம் மீறி அதிகார துஷ்பிரோயகம், அத்துமீறல், சட்டமன்ற குழுக்களின் தலைவர்களின் அதிகாரத்தை பறிப்பது, அனைத்து அரசு துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தன்னையும் அழைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நிர்பந்தம் செய்வதால் சபாநாயகரின் பதவி சர்ச்சைக்குரிய ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963-ன் படி எல்லையில்லா அதிகாரங்கள் சபாநாயகருக்கு இருப்பதாகவும், அனைத்து அரசு விழாக்களிலும் சபாநாயகரை அழைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாண்புமிகு சபாநாயகர் செல்வம் கூறி வருகிறார். அவ்வாறு யூனியன் பிரதேச சட்டம் 1963 பிசினஸ் ரூல்சில் இல்லை. இது சம்பந்தமான ஆதாரத்தை மாண்புமிகு சபாநாயகர் நிரூபிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய ஆதாரத்தை காண்பிக்காமல் அரசு விழாக்களில் துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேடையில் எந்த வரிசையில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து இருக்கை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமான 1986-ல் G.O.Ms. No.5 பொது நிர்வாகத்துறையில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத் துறையினரால் வெளியிடப்பட்ட அரசாணையை துணைநிலை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளார்.
இவ்வளவு அறிவில் சிறந்த மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு நாளும் தனது பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தன் மீது தினசரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுப்பது ஏன் என்பது மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகம் துணைநிற்கும் என்பதை தனது அறியாமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. வைத்திலிங்கம் எம்பி அவர்கள் சட்டப்பேரவை தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரசும், திமுகவும் ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் இது சம்பந்தமாக திமுகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சிவா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்காது என பாஜகவுக்கு ஆதரவான ஒரு நிலைபாட்டை திமுக எடுத்துள்ளார். தமிழகத்தில் திமுகவினுடைய முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தினந்தோறும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து மக்களை ஏமாற்ற குரல் கொடுப்பதும், தேவைபடும் போது பிரதமரையும், பாஜகவின் முக்கிய தலைவர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து உரிய மரியாதை செலுத்துவதும் திமுகவின் இரட்டை வேடத்திற்கு சான்றாகும். அது போலவே புதுச்சேரி திமுகவும் ஒரு நிலைபாட்டை எடுத்துள்ளது. அது அந்த கட்சியினுடைய கொள்கை முடிவாகும். இதை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் உணர்ந்துகொள்வது நல்லது.
லாட்டரி அதிபரின் மகன் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க முன்வந்த போது அது தவறு என மாவட்ட ஆட்சியிரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக முறையிட்டது. ஆனால் திமுகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சிவா அவர்கள் 30 தொகுதிகளிலும் லாட்டரி சீட்டு அதிபரின் மகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும் நாங்கள் வரவேற்போம் என ஒரு அந்தர்பல்டி அடித்துள்ளார். இது ஏன் என்று விளங்கவில்லை.
புதுச்சேரியில் தினந்தோறும் சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்கும் ஒவ்வொரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொடுத்து வருவது மாண்புமிக்க மேன்மை தாங்கிய சபாநாயகர் பதவியை கலங்கப்படுத்தும் செயலாக உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments