Breaking News

செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை


 

செமி-கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான கனிமொழி எம்.பி., விதி எண் 377ன் கீழ் பேசும்போது, மின்னணுத் துறையில் செமி கண்டக்டர் உற்பத்தி என்கிற மிக முக்கியமான விவகாரம் பற்றியும், அதில் தமிழ்நாட்டின் முக்கியப் பங்கு பற்றியும் ஒன்றிய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். உலகளவில் செமி கண்டக்டர் சிப்ஸ் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த இறக்குமதி 92% அதிகரித்துள்ளது. செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவு நோக்கிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் சமீபத்தில் ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளில் ஒன்றுகூட இத்துறையில் ஆற்றல்மிக்க தென்மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. 2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு சாதன மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உட்பட்டவையாகும்.

மேலும், தமிழ்நாட்டின் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விஎல்எஸ்ஐ மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் சிறப்புப் படிப்புகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும், 1.13 லட்சம் இளைஞர்கள் டிப்ளோமா மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டம் பெறுகிறார்கள், மேலும், ஒவ்வொரு ஆண்டும் 494 ஐடிஐகள் செமிகண்டக்டர் தொழிலுக்குத் தேவையான வகையில் 700 படிப்புகளை வழங்குகின்றன. தமிழ்நாட்டின் மேம்பட்ட தொழில் சூழல் மற்றும் திறமையான தொழிலாளர்கள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இலக்குகளை விரைந்து எட்டுவதற்கு தங்கள் தனித்துவமான பங்கை வழங்கி வருகின்றனர். எனவே இந்தத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க, செமி கண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments

Copying is disabled on this page!