குஜராத் கடல் பகுதியில் மாயமான தூத்துக்குடி மீனவரை மீட்கக்கோரி கர்ப்பிணி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு
குஜராத் மாநிலம். போர்பந்தர் கடல் பகுதியில் மாயமான மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விளாத்திகுளம் தாலுகா, அயன்பொம்மையாபுரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (30). மீனவரான இவரது மனைவி சந்தனசெல்வி, இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும், தற்போது சந்தனசெல்வி 5 மாதக் கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில் அண்ணாதுரை கடந்த நவம்பர் 14ஆம் தேதி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரது படகில் கொச்சி துறைமுகத்திலிருந்து 13 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றார். கடந்த நவம்பர் 22 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர் கடலில் தவறி விழுந்துவிட்டதாக, படகிலிருந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சந்தனசெல்வி மற்றும் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கடந்த வாரம் மனு அளித்தனர். ஆனாலும், இதுவரை அண்ணாதுரை மீட்கப்படவில்லை. எனவே, கடலில் விழுந்து 11 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், விரைந்து அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சந்தனசெல்வி மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மீண்டும் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சந்தனசெல்வி கூறும்போது: கணவரை காணாமல் வயிற்றில் குழந்தையுடன் தூக்கமின்றி தவித்து வருகிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments