அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30 ஆம் தேதி தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி செயல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான முன்னேற்பாட்டுக் கூட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:
பெண்கள் உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்து, இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் புதுமைப்பெண் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயின்றுவரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3387 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2023-24ம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விபயின்ற 4408 மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
எனவே, அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விபயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கிவைக்கவுள்ளார். ஆகையால், தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மாணவிகளும் பயன்பெறுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். மாணவிகளின் வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து, தேவையிருக்கும்பட்சத்தில் வங்கியாளர்களின் முகாம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 6372 மாணவர்கள் மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகை பெற்று பயன்பெற்று வருகின்றனர் என்றார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணைர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) சகாய ஜோஸ், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் நந்திதா, மாவட்ட முன்னோடி வங்கிமேலாளர் துரைராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments