அனுமன் ஜெயந்தி வீதி உலாவிற்கு அனுமதி மறுத்த கோவில் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்..
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் ஸ்ரீ முத்தலாய் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஊர் மக்கள் சார்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுமன் உற்சவ சிலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் உற்சவர் வீதி உலா நடைபெறும் என அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. கோவில் அதிகாரி மற்றும் பொதுமக்கள் அழைப்பு விடுவதாக பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு அறிவிப்பின்படி அனுமன் ஜெயந்தி வீதி உலா நடைபெறாது என கோவில் அதிகாரி தன்னிச்சையாக பெயர் பலகையில் எழுதி வைத்ததுடன், காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் இன்று காலை முதல் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை முடிந்த நிலையில், கோவில் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை அழித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்காமல், வீதி உலா மறுக்கப்படுவதற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
No comments