புதுச்சேரி அரசை கண்டித்து உழவர்கரை ராசாத்தி மதுபான கடையில் வாங்கிய மதுபானங்களை கீழே ஊற்றி பரிசு கூப்பனை எரித்தும் போராட்டம்..
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் பாளையம் பகுதியில் ராசாத்தி மதுபான கடை உள்ளது. இங்கு ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களுக்கு சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் வணிகத் திருவிழா பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த சமூக சேவகர் வழக்கறிஞர் சசிபாலன் மற்றும் அவரது பாசறை நிர்வாகிகள் நேரடியாக மதுபான கடைக்குச் சென்று 500 ரூபாய் கொடுத்து மதுக்கள் வாங்கினர். மேலும் வாங்கிய மதுக்களை சாலையில் ஊற்றியும் பரிசு கூப்பனை எரித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி அரசும் சுற்றுலா துறையும் உழவர்கரை தொகுதி மட்டுமல்லாமல் புதுவை முழுவதும் இதுபோன்ற பரிசு கூப்பனை அறிவித்து குடிமகன்களை ஊக்குவிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த பரிசு கூப்பனால் ஏதாவது நமக்கு பரிசு கிடைக்காதா என ஏங்கும் குடும்பங்கள் பலர் இருக்கின்ற நிலையில் இது போன்று மதுபான கடையில் சுற்றுலாத் துறையால் வழங்கப்படும் வணிகத் திருவிழா கூப்பன் பல்வேறு குடும்பங்களை கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் உழவர்கரை தொகுதியில் மதுபான கடைகளை எதிர்த்து வழக்கறிஞர் சசிபாலன் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments