சாலைகளில் மீன் விற்பதற்கு எதிர்ப்பு., மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் அரியாங்குப்பம் சந்திப்பில் சாலை மறியல்..
புதுச்சேரி அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடியும் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, மார்க்கெட்டுக்கு வெளியே மற்றும் புதுச்சேரி- கடலூர் சாலையில் கூடையில் மீன்களைக் கொண்டு வந்து சில விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாலையில் மீன் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20-கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அரியாங்குப்பம் சந்திப்பில் மீன் கூடையுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments