மண்டல கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்: 32 பயனாளிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஆணைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்ட 32 பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை மண்டல வாரியாக மக்கள் குறைதீர்களை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்திலும், கிழக்கு மண்டல அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில், சொத்துவரி, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 32 பேருக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாக மண்ட அளவிலான குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி வருகிறோம். இந்த முகாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் 33 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். ஒரு சில பகுதிகளில் மட்டும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த பகுதிகளுக்கும் விரைவில் தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலான விசயமாக இருந்து வருகிறது. தினமும் 180 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இந்த பணியில் 1300 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள பக்கிள் ஓடை உள்ளிட்ட அனைத்து மழைநீர் வடிகால்களையும் மழைக்கு முன்பாக தூர்வாரி சுத்தம் செய்து வைத்திருந்தோம். அண்மையில் பெய்த கனழையில் 16, 17, 18 ஆகிய வார்டுகளில் மட்டும் மழைநீர் தேங்கியது. அதனையும் அகற்றிவிட்டோம். மழைநீர் வடிகால்களில் தண்ணீர் செல்கையில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் கிடந்ததை பார்த்தோம். இவைகள்தான் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மழைநீர் வெளியேறுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகளை வடிகால்களில் போடுவதை பொதுமக்கள் தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர்கள் பாலமுருகன், வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், கவுன்சிலர் நாகேஸ்வரி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், வட்டப்பிரதிநிதி முத்துராமலிங்கம், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments