பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
இயக்குநர் ரஞ்சித் நடத்திய நிகழ்ச்சியில், கானா பெண் பாடகி இசைவாணி என்பவர் ஐ அம் சாரி ஐயப்பா எனத் தொடங்கும் பாடலை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாடகி இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், வில், அம்பு ஏந்திய பாலசாஸ்தா வேடமணிந்த நபருடன், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் ராம.நிரஞ்சன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் பாலசாஸ்தா எழுதியதைப் போன்று எழுதப்பட்ட புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி, கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.நிரஞ்சன் கூறுகையில், பாடகி இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வில், அம்பு ஏந்திய பாலசாஸ்தா வேடமணிந்த நபருடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஊர்வலமாக வந்து மனு அளித்துள்ளோம். ஐயப்ப சுவாமி பிறந்த ஊராக கருதப்படும் மயிலாடுதுறையை அடுத்த வழுவூரில் உள்ள வழிக்கறையான் என்கிற பாலசாஸ்தாவுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், இந்துக்களையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்துவதை தடுக்கும் வகையில் இந்துக்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்றுவரும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐயப்பனின் பிறப்பிடமான வழுவூருக்கு நேரில் வந்து பார்வையிட்டு, திருப்பணி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments