பொய் வழக்கில் பாமக நிர்வாகி சிறையில் அடைப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் தந்தை புகார்!
தனது மகனை பொய் வழக்கில் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மத்திய மாவட்ட பாமக செயலாளர் சின்னதுரை, மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட பாமக செயலாளர் சின்னத்துரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜாணிடம் அளித்துள்ள மனுவில்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த எனது மகன் மூக்காண்டி ராஜாவை தனிப்படை போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து, எனது மகனை தேடி காவல்நிலையத்திற்கு சென்றோம். ஆனால், அனைத்து காவல் நிலையங்களிலும் தேடியும் எனது மகன் எந்த காவல் நிலையத்திலும் இல்லை.
ஆனால், மறுநாள் எனது மகன் மூக்காண்டி ராஜாவை, கஞ்சா வைத்திருந்ததாக போதைப்பொருள் ஒழிப்பு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், எனது மகன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாகியும் அவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, பொய் வழக்கு பதிவு செய்து எனது மகனை கைது செய்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments