Breaking News

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை..

 


தூத்துக்குடியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் மேலமடத்தைச் சேர்ந்த ஆதிமுத்து மகன் தனசிங் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் தலையில் காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, தனசிங்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதனைத்தொடர்ந்து தனசிங் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை எடுக்கப்பட்டு திருச்சி, திருநெல்வேலி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர், தனசிங்கின் உடலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் தனசிங் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தனசிங்கின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!