Breaking News

கடலில் தூண்டில் வளைவு முறையாக அமைத்து தர வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் கடலில் இறங்கி போராட்டம்..

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராம மக்கள் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். 


 இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதன் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். 


 ஆனால் அமலிநகர் கடற்கரை பகுதியில் பைபர் படகுகள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை உள்ளது எனவும், எனவே அமலிநகர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  


இதையடுத்து ரூபாய் 55 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால் ஒருபுறம் முழுமையாக தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்புறம் முழுமையாக அமைக்காமல் சுமார் 50 மீட்டர் மட்டுமே அமைத்துள்ளனர். அதனை கடலுக்குள் படகை செலுத்தியது, கடலில் இருந்து கரைக்கு படகை கொண்டு வருவதும் மிக சிரமமாக உள்ளது. எனவே முழுமையாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மீனவ மக்கள் கடலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். 


 இதையடுத்து இன்று திருச்செந்தூர் அருகே உள்ள பழைய காயல், புன்னக்காயல், சிங்கித்துறை, கொம்புத்துறை, வீரபாண்டிய பட்டினம், ஜீவா நகர், அமலிநகர், ஆலந்தலை உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனை அனைத்து மீனவ கிராமங்களிலும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 


 மேலும் அமலிநகர் கடற்கரையில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் கடலுக்குள் இறங்கி கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முழுமையாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!