Breaking News

தமிழ்நாடு முதல்வர் பற்றி விமர்சிக்க அமைச்சர் நமச்சிவாயத்திற்கு எந்த தகுதியும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கண்டனம் !

 


அண்ணாமலை போன்ற அரைவேக்காடு அரசியல் தலைவருக்கு முட்டுக்கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசைப் பற்றியும், எங்கள் கழகத் தலைவர் பற்றியும் விமர்சனம் செய்ய அமைச்சர் நமச்சிவாயத்திற்கு எந்த தகுதியும் இல்லை. தொடர்ந்து இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக விமர்சித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார்.


இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் சுயமாக தொழில் தொடங்க மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தி வழங்கியது, குடும்ப தலைவிகள் பெயரில் வீடு, பெண் காவலர்களுக்கு சலுகைகள், அரசுப் பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு என பெண்கள் முன்னேற்றத்தில் இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கின்ற பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் அவர்கள் செயல்படுத்தி பெண்களுக்கான சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பம்பரம்போல் சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார். இப்படி பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு அரசை அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தை வைத்து வாய்க்கு வந்தபடி அதிமுக–வும், பாஜகவும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல. பாலியல் குற்றவாலி கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் கழக அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விநோதங்களை அரங்கேற்றி இன்று ஊடக காட்சிப் பொருளாகி மீம்சில் முதலிடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். அண்ணாமலையின் கேளிகூத்துக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முட்டுக்கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. அண்ணாமலை அடித்துக்கொண்டது திமுக ஆட்சிக்கான சவுக்கடி என்று வசனம் பேசி உள்ளார். எந்த நாட்டில் ஆன்மீகம் செழிக்கிறதோ அந்த நாடு சிறப்பாக இருக்க முடியும் என்று தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வணங்கிய பின் நமச்சிவாயம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆன்மீகம் செழிக்கிறதையும், ஆட்சி சிறப்பாக இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டிற்கு சென்றவுடன் அண்ணாமலையின் போலி அரசியல் தோஷம் ஒட்டிக் கொண்டதுபோல், மாணவி பாலியல் சம்பவத்தில் தமிழ்நாடு முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் திமுக அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்றும் அரசியல் எகத்தாளம் பாடியுள்ளார். தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி பேச நமச்சிவாயத்திற்கு எந்த தகுதியும் இல்லை. மக்கள் போற்றும் ஒரு அரசையும், ஆட்சியாளர்களையும் விமர்சிக்கும் முன் தமது ஆட்சி மற்றும் கட்சியின் செயல்பாட்டை சிந்தித்து பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து வாய் புளித்ததோ மாங்கோ புளித்ததோ என்று பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

நாடு முழுவதும் பாஜக கூட்டணி வைத்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை கூட்டணியில் இருந்துகொண்டே அக்கட்சிகளின் மதிப்பினை குறைப்பதும், அந்த கட்சிகளை உடைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் பாஜகவின் செயல்பாடாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் மதிப்பை குறைத்து, அவரது கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு பின்னடைவையே ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக செயல்படுகிறது. அதைத்தான் நாங்கள் புதுச்சேரியில் இரட்டை என்ஜின் பூட்டிய அரசு என்று கூறுகிறோம். 

இரட்டை என்ஜின் பூட்டிய ஆட்சியில் நீங்கள் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும்போது தான் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்கு என்ன நீதி கிடைத்தது. அதில் கைது செய்யப்பட்ட குற்றவாலிகளில் ஒருவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து இதுவரை எந்த உண்மையும் வெளிவராமல் மறைப்பதற்கு காரணம் என்ன?. புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாதவர், "கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு சொன்ன மாதிரி புதுச்சேரி உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

நாடு முழுவதும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 54 மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வழக்குகள் அதிகம் கொண்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரபிரதேசம், குஜராத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை நாடறியும். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதும், குஜராத்தில் கூட்டு பாலியல் வல்லுறவிற்கு ஆளான பில்கிஸ்பானுவின் நிலை குறித்தும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீராக்கனைகளின் போராட்டம் குறித்தும், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற 'கொடூர வீடியோ' குறித்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளும் பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மேற்கூறிய பெண்களுக்காக வாயை திறக்காதது ஏன்? என்று தெளிவுபடுத்துவாரா?

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை குடிசைத் தொழிலாக மாறி இன்று படித்த இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதை தடுக்க வழியில்லை. புதுச்சேரியில் இயங்கும் ஸ்பாக்களில் தாராளமாக அரங்கேறும் விபச்சாரத்தை தடுக்க நடவடிக்கை இல்லை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண முடியவில்லை. நாள்தோறும் நடைபெறும் இணையவழி குற்றங்களை தடுக்க திட்டமில்லை. காவல் துறை செயலிழந்து சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், உங்கள் கட்சி எம்எல்ஏ–க்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏ–க்கள் செய்யும் அரசியல் விளையாட்டுக்களை நாடே கேளிக்கையாக பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி புதுச்சேரி ஆட்சியிலும், உங்கள் கூட்டணியிலும் பல்வேறு பிரச்சனைகள் தலைக்குமேல் உள்ளதை சரிசெய்ய நீங்கள் முனைப்பு காட்டுங்கள்.

அதைவிடுத்து தமிழ்நாடு அரசைப் பற்றியும், எங்கள் கழகத் தலைவர் பற்றியும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல. இது கண்டனத்திற்குரியது. அண்ணாமலை போன்ற அரைவேக்காடு அரசியல் தலைவருக்கு முட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இதுபோன்ற விமர்சனங்களை அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments

Copying is disabled on this page!