தூத்துக்குடியில் மழைவெள்ள நீர்வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
தூத்துக்குடி தபால்தந்தி காலனி, செல்வநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் மழைவெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆகிய நாட்களில் பெய்த கனமழையினால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் மின்மோட்டார் அறை அறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஆதிபராசக்தி நகருக்கு சென்ற அவர் அங்கு தேங்கியிருக்கும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை சென்ற அவர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருக்கும் மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
தொடர்ந்து மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட தபால்தந்திகாலனி பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து பேசினார், அங்கு தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். அதன் பிறகு கதிர்வேல்நகர் பகுதியில் தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மூலம் ஏற்பாடு செய்த அதிக திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் பணியை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments