தூத்துக்குடியில் ரூ. 32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிறு) மாலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை (30ம் தேதி) புதுமைப்பெண் விரிவாக்கத்திட்டத்தினை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத் தொழில்களை பரவலாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும், விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசுக் கட்டடங்களில் மிக அளவில் 21 தளங்களுடன் கூடிய மாபெரும் டைடல் பூங்கா ஆகியவற்றை முதல்வரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ரூ.32.50 கோடியில், 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை இன்று (டிச.29) ஞாயிற்றுக்கிழமை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த பூங்காவானது, வாகனம் நிறுத்துமிடம், பல வகையான உணவுக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமையும். தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல் கல் திட்டமாக உள்ளது.
இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கிடும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரையில், 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நாளை (30ம் தேதி) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து இந்த ஆண்டு உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் ரூ.ஆயிரம் பெற்றுப் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments