மனு அளித்த 1 மணி நேரத்தில் ஆணை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பித்தவருக்கு 1 மணி நேரத்தில் அந்த இடத்திலேயே மேயர் ஜெகன் பெரியசாமி ஆணை வழங்கினார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் கடந்த 6 மாத காலமாக தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. தற்போது மிகக்குறைந்த அளவு மனுக்களே மக்கள் அளித்து வருகின்றனர். இதில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. சாலை, கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மட்டும் அந்த பகுதியின் நிலைமைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வரிசைப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த மாதம் 20ம் தேதி பெய்த மழையால் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. குறிப்பாக, இந்த மண்டலத்திற்குட்பட்ட 16,17,18 ஆகிய வார்டு பகுதிகளில் 70 சதவீத இடங்களில் குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளது. மேலும், 30 சதவீதம் அளவிலான இடங்கள் காலி மனைகளாக உள்ளது. அந்த காலிமனைகளில் மழைநீர் தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் பாதிப்பு உண்டாகிறது. அதையும் பல்வேறு வகையில் வெளியேற்றி வருகிறோம். எனவே, காலிமனைகளில் அதன் உரிமையாளர்கள் தங்களுக்குரிய இடத்தில் மணல் கொண்டு நிரப்பி சமநிலைப்படுத்தி மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் பொதுமக்கள் காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்குதல், காலிமனைகளில் குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி கோருதுல், பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அதில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவருக்கு 1 மணி நேரத்தில் அந்த இடத்திலேயே ஆணையை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, உதவி ஆணையர்கள் பாலமுருகன், இர்வின் ஜெபராஜ், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், ஜெபக்குமார் ரவி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, கனகராஜ், பொன்னப்பன், விஜயலெட்சுமி, சீனிவாசன் (எ) ஜாண், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments