கால்வாய்களில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை போடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!
மழைநீர், கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போடுவதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர் முகாம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் வெங்கட்ராமன், சரவணக்குமார், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்திலும் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். அதனையும் முறையாக பார்வையிட்டு அதனை சரிசெய்யும் பணிகளும் ஓருபுறம் நடைபெறுகிறது. இருப்பினும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மண்டலத்தில் ஏற்கனவே பெறப்பட்ட 240 மனுக்களில் 234 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு இறப்பு, சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையின்போது மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 16, 17, 18 வார்டு பகுதிகளில் 30 சதவீதம் காலிமனைகள் உள்ளதால் அதில் தேங்கும் மழைநீரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. இருப்பினும், அதனை முறையாக மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தெற்கு மண்டலம் பகுதியில் 56 முதல் 60 வரை உள்ள வார்டு பகுதியில் கோரம்பள்ளம் குளத்தின் மூலம் வரும் நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான வழிமுறைகளையும் மேற்கொண்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கலெக்டர் அலுவலகம், இபி காலணி பகுதியில் காற்றாற்று வெள்ளம் வந்ததையும் முறையாக அகற்றி சீர்படுத்தியுள்றோம். அதேபோல் வடிகால் கால்வாய்களையும் பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப முறைப்படுத்துவோம். பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் மழைவெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், பல்வேறு கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவு தேங்கியதால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை அப்புறப்படுத்தி மழைநீரை வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டோம். எனவே, பொதுமக்கள் நீர் வழித்தடங்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை பொருட்களை போடாமல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஓத்துழைக்க அளிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணைப் பொறியாளர் சரவணன், திட்ட உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ஜெபராஜ், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன். இளநிலை பொறியாளர் பாண்டி, குழாய் ஆய்வாளர் மாரியப்பன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், சரண்யா, ரிக்டா, எடின்டா, மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments