மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு தகவல்.
மத்திய அரசு 2020-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் கூட்டு அளவுகோலின் படி வகைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.5 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது குறு நிறுவனம். இவை முறையே ரூ.10 கோடிக்கு மிகாமலும் ரூ.50 கோடிக்கு மிகாமலும் இருந்தால் சிறு நிறுவனம். இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமலும் ஆண்டு விற்பனை வருவாய் ரூ.250 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அது நடுத்தர நிறுவனம்.
இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.உத்யம் பதிவு செய்வது இணைய வழியாக மிக எளிய செயல்முறைகளைக் கொண்ட கட்டணமில்லா செயல்முறையாகும்.ஆதாரோடு இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் பான் கார்டு இருந்தால் தமது உற்பத்தி வணிக அல்லது சேவைத் தொழில் நிறுவனத்துக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.in என்ற இணையதளத்தினுள் நுழைந்து மிக எளிதாக தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறலாம்.
மாவட்டத் தொழில் மையங்கள் உத்யம் பதிவு செய்வது குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு தேவைப்படுவோருக்கு உத்யம் பதிவுச் சான்றிதழ் இணையவழி பெற ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் வழங்குகின்றன. இவையன்றி வங்கிகளும் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற உதவுகின்றன.
உத்யம் பதிவு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களைத் தேடி சேவைகள் என்ற அடிப்படையில் உத்யம் பதிவுக்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் வட்டார நிலைகளிலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் மட்டத்திலும் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
No comments