கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை கட்டாய ஹெல்மெட் சட்டம்..? அதிமுக அன்பழகன் காட்டம்..
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் இருந்து மாற்றலாகி புதுச்சேரி மாநிலத்திற்கு காவல்துறைக்கு பணிக்கு அவ்வப்போது வருகை தரும் காவல்துறை உயரதிகாரிகள் டெல்லியில் உள்ளது போன்று பல சட்ட நடைமுறைகளை இங்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணமாக டெல்லி போன்று இங்கேயும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வருவதும், ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் தான் தயாரித்த ஹெல்மெட்களை பல லட்ச கணக்கில் மக்களிடம் விற்பனை செய்வதும், விற்பனை முடிந்தவுடன் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு ரத்து செய்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டாய ஹெல்மெட் சட்டம் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என காவல்துறை உயரதிகாரி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்கள் எதிர்வரும் 12-ம் தேதியில் இருந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்திருந்தார். பல்வேறு பிரச்சனைகளில் எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அமுல்படுத்தப்படாமல் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
புதுச்சேரியை ஆளும் அரசின் தவறான சுற்றுலா கொள்கை முடிவினால் புதுச்சேரி நகரப்பகுதியே போக்குவரத்து நெரிசலில் அல்லல்படுகின்றது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் மக்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆளாக்கப்படுகின்றனர். காவல்துறையினரின் பல்வேறு நியாயமான பிரச்சனைகளை அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 70-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் பணியிடத்திற்கு படித்த இளைஞர்களுக்கு நேரடிய நியமனம் மூலம் வேலைவாய்ப்பு இன்று வரை வழங்கப்படவில்லை. செவிலியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ரிஸ்க் அலவன்ஸ் கொடுக்கப்படவில்லை. 200-க்கும் மேற்பட்ட காலியாக உள்ள காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவல்துறையின் அத்தனை பணியிடங்களும் அதிகப்படுத்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் இன்றுவரை கண்காணிப்பாளர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
புதுச்சேரி மாநிலம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்தும் இங்கு காவலர் பயிற்சி பள்ளி தான் உள்ளதே தவிர காவலர் பயிற்சி கல்லூரி ஏற்படுத்தவில்லை. இதனால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்கள் இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிரச்சனையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு குற்றம் செய்த தனது கட்சிக்காரரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அந்த பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்வரும் 30-ம் தேதி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் புதுச்சேரியிலும் பழைய பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் 30-12-2024 திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப்பேரவை பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments